நெல்லையில் ஆணவ கொலை?- இளம்பெண்ணை பெற்றோர் கொன்றதாக காதலன் புகார்
நெல்லையில் 3 நாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம் பெண்ணை அவரது பெற்றோர் கொன்றதாக காதலன் புகார் அளித்துள்ளார்.
நெல்லை பேட்டை அன்னதான விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பட்சிராஜன். இவரது மகள் சிவமதி (வயது 19). இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிவமதி மாற்று சமூகத்தைச் சார்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் இவர்களது குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது. சிவமதி குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வாலிபரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இருந்த போதிலும் இருவரும் காதலை கைவிடாததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று சிவமதி திடீரென பேச்சு மூச்சின்றி மயக்கம் அடைந்த நிலையில் அவரது பெற்றோர்கள் உறவினர்களுடன் கண்டிகை பேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இளம்பெண் சிவமதி ஏற்கனவே இறந்துவிட்டார். என்று கூறியுள்ளனர். இதையடுத்து பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் முதல் கட்டமாக சிவமதி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. அதன் அடிப்படையில் அவரது உடலை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் சிவமதி காதலித்த அந்த வாலிபர் தரப்பில் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சிவமதியை அவரது குடும்பத்தினர் கொலை செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அதன் அடிப்படையிலும் காவல்துறையினர் இந்த வழக்கை நேர்மையான முறையில் விசாரணை நடத்துவதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் டவுன் உதவி கமிஷனர் இளவரசனை இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக தற்போது நியமித்துள்ளார். அந்த விசாரணையும் தற்பொழுது தீவிரமாக தொடங்கியுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் சிவமதி காதலித்த வாலிபர் தரப்பிலானவர்கள் மாநகர கமிஷனரிடம் புகார் மனு கொடுக்க வர இருக்கின்றனர். உடற்கூறாய்வு தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டு உள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாக இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.