#BREAKING வீட்டிலேயே பிரசவம் - பிறந்த பெண் குழந்தை உயிருடன் புதைப்பு?
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் சம்பை பகுதியை சேர்ந்த நாகபாண்டி - லோக நந்தினி எனும் தம்பதியினருக்கு பிறந்த பெண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நாகபாண்டி - லோகநந்தினி தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், லோக நந்தினி மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். லோகநந்தினிக்கு கடந்த 18 ஆம் தேதி அதிகாலை சுமார் 2 மணிக்கு வீட்டிலேயே பிரசவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. லோகநந்தினிக்கு பிரசவத்திற்கு பின்னர் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் மருத்துவர்கள் பிறந்த குழந்தை எங்கே ? என மருத்துவர்கள் கேட்டுள்ளனர். அப்போது குழந்தை உயிரிழந்து விட்டதாக அவர் கூறியுள்ளார். பிரசவத்தில் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் குடும்பத்தினர் புதைத்தனர்.
வீட்டின் அருகே குழந்தை புதைக்கப்பட்ட தகவலை அறிந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், நாகபாண்டி வீட்டின் அருகே புதைக்கப்பட்ட குழந்தையை மீண்டும் தோண்டி எடுத்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தை என்பதால் பிறந்த குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டதா என நாகபாண்டி, அவரது தந்தை கிருஷ்ணா மற்றும் சகோதரி முனீஸ்வரி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.