காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருநள்ளாறு சனி பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்காலில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இசிதா ராட்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற புறநானாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம். இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அபயஹஸ்த முத்திரையுடன் அருள் பாலிக்கிறார். ஆலயத்திற்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக சனிக்கிழமை தோறும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து நளன் குளத்தில் நீராடி சனிபகவானை தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாலயத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு வீதிகளில் கூடி நளன் குளத்தில் நீராடி சனிபகவானை வழிபட்டுச் செல்வது வழக்கம். வரும் மார்ச் 6-ஆம் தேதி காலை 8.24 மணிக்கு சனீஸ்வர பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இந்நிலையில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்காலில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இசிதா ராட்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.