×

இந்து சமய அறநிலையத் துறை கோவிலில் வேலை..!

 

இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பின் படி, கோயிலில் உதவி பொறியாளர் (சிவில்), இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், தமிழ் புலவர், உதவி மின்பணியாளர், பாரா, குருக்கள் அர்ச்சகர் (நிலை-2), காவலர் மற்றும் உதவி பரிச்சாரகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.கல்வித் தகுதி குறைந்தவர்களுக்கும், தொழில்நுட்ப கல்வி பெற்றவர்களுக்கும் ஏற்ற வகையில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த அறிவிப்பு வேலை தேடுபவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணிக்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை அரசு ஊதிய நிர்ணயத்தின்படி சம்பளம் வழங்கப்படும். அதேபோல், சீட்டு விற்பனையாளர் பணிக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் கணினி சான்றிதழ்கள் அவசியமாக்கப்பட்டுள்ளன.

உதவி பொறியாளர் (சிவில்) பணிக்கு சிவில் பொறியியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் புலவர் பணிக்கு பி.லிட், பி.ஏ, எம்.ஏ அல்லது எம்.லிட் முடித்திருக்க வேண்டும். உதவி மின்பணியாளர் பணிக்கு ஐடிஐ மற்றும் மின் உரிம வாரியத்தின் "எச்" சான்றிதழ் அவசியம். பாரா, காவலர், உதவி பரிச்சாரகர் போன்ற பணிகளுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருப்பது போதுமானதாகும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2025 தேதியின்படி குறைந்தது 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சமாக 45 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் www.hrce.tn.gov.in அல்லது https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளங்களில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்:

இணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,

மயிலாப்பூர்,

சென்னை - 600 004

என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 28, 2025-க்குள் கோயில் அலுவலகத்தை வந்தடைய வேண்டும்.