×

"ஆன்லைனுக்கு பை பை... இனி நேரடி தேர்வு தான்" - உயர்க்கல்வி துறை திட்டவட்டம்!

 

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு சாதாரண தேர்வுகள் முதல் செமஸ்டர் தேர்வுகள் வரை ஆன்லைன் வழியாகவே நடைபெற்றன. தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்துவிட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர கட்டாயப்படுத்தப்படுவதில்லை. ஆன்லைன் வழியே வகுப்பைக் கவனிக்க நினைப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேரடியாகவும் வகுப்புகளுக்கு வரலாம் என சொல்லப்பட்டுள்ளது. தற்போது இரண்டு முறைகளிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது செமஸ்டர் தேர்வுகள் நெருங்கி வருகின்றன. கொரோனா முழுவதுமாக குறைந்துவிட்டதால் நேரடி தேர்வு நடத்த பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தீர்மானித்துள்ளன. ஆனால் மாணவர்கள் மத்தியில் இந்த முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்திவிட்டு, தேர்வை நேரடியாக நடத்துவது சரியான அணுகுமுறை அல்ல என மாணவர்கள் கூறுகின்றனர்.

இதனை வலியுறுத்தி மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தேர்வுகளைப் புறக்கணிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால் கல்லூரிகள் செய்வதறியாது இருக்கின்றன. தற்போது அதற்கு தமிழ்நாடு உயர்க்கல்வித் துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. உயர்க்கல்வித் துறை செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இனி செமஸ்டர் தேர்வுகள் ஆஃப்லைன் வழியே (நேரடியான எழுத்து தேர்வு) மட்டுமே நடைபெறும். அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும்” என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.