×

தெரு நாய்களை சுடும்போது குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்.. ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க ஹைகோர்ட் உத்தரவு...

 

தெரு நாய்களை சுடும்போது குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் எறையூரைச் சேர்ந்த பாபு என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், எறையூர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை சுட்டுத்தள்ள  பஞ்சாயத்து தலைவர் குளஞ்சி, துணைத்தலைவர் சின்னதுரை, கவுன்சிலர் ஜெயராமன் ஆகியோர் சேர்ந்து நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த விஜய்குமார் என்பவரை ஏற்பாடு செய்திருந்ததாகவும், அவர் சுட்டதில்  வீட்டு வேலை செய்துகொண்டிருந்த தனது தாய் விஜயாவின் மேல் குண்டு பாய்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை முடிந்து வந்த தனது தாய் 3 தினங்களில் உயிரிழந்து விட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அவர்,  சிகிச்சையின் போது பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட மூவரும் குண்டு பாய்ந்ததை மறைத்து காயத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்க சொல்லியிருந்ததாக  தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனையின்போதே காலில் இருந்த துப்பாக்கி  குண்டு எடுக்கப்பட்டதாகவும்,  அந்த குண்டில் இருந்த  நச்சுத்தன்மைதான் தனது  தாயின் மரணத்திற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  தலைவர் உள்ளிட்ட மூவருக்கும் எதிராக மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை என்றும், இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துவிட்டு பின்னர் தராமல் ஏமாற்றி விட்டனர் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும்  நாய் பிடிக்கும்போது அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.  இந்த  வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘‘விஜயா உயிரிழந்ததற்கு நாய்களை சட்டவிரோதமாக சுட்டுப்பிடித்ததே காரணம் என்பதற்கான முகாந்திரம் உள்ளது. தெருவில் திரியும் நாய்களை சுட்டுத்தள்ள உத்தரவிட்டதே சட்ட விரோதம்தான்.

 எனவே, விஜயா மரணத்திற்கு காரணமான மூவரும் சேர்ந்து விஜயாவின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்படவில்லை என்பதால் தமிழக அரசும் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மொத்த இழப்பீடான 10 லட்ச ரூபாயை விஜயாவின் வாரிசுகளுக்கு எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்.