×

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத் துறைக்கு அபராதம் விதித்த ஐகோர்ட்

 

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்ந்திருந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்யாததால் அமலாக்கத்துறைக்கு முப்பது ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதோடு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ்,வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், பதில் மனு இன்னும் தயாராகவில்லை என்பதால் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கிய பின்னரும் ஏன் இன்னும் பதில் மனுத்தாக்கல் செய்யாதது சரியான நடவடிக்கை அல்ல எனவும் கூறினர். ஒருங்கிணைந்த பதில் மனுவாக தாக்கல் செய்ய உள்ளதால் ஒருமுறை மட்டும் அவகாசம் வழங்க வேண்டுமென அமலாக்கத்துறை வழக்கறிஞர் என். ரமேஷ்

கோரிக்கை வைத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஒரு மனுவுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் முப்பது ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இந்த தொகையை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.