×

"ஒரு டாஸ்மாக் கடையை மூடுவதால் பெரிய இழப்பு ஏற்படாது" - அரசுக்கு மதுரைக்கிளை கண்டனம்!

 

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த கிருபா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "மெஞ்ஞானபுரம் பேருந்து நிலையம் அருகில் பஜாரின் மையப்பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினசரி பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மது அருந்துபவர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மது விற்பனை கடையை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுவித்து வந்தனர். கடையை இடம் மாற்றக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். 

இதன்பின் திருச்செந்தூர் தாசில்தார் தலைமையில் கடந்தாண்டு மே மாதம் நடந்த கூட்டத்தில் மேற்படி கடையை ஆறு மாதத்திற்குள் இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியரும், டாஸ்மாக் மேலாளரும் ஒப்புக் கொண்டார். ஆனால், இதுவரை கடையை இடமாற்றம் செய்யவில்லை. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, கடையை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

டாஸ்மாக் தரப்பு கடையை இடமாற்றம் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “ஒரு கடையை இடமாற்றம் செய்ய எவ்வளவு நாள் கால அவகாசம் கேட்பீர்கள்? ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் கால அவகாசம் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கடையை மூடுவதால் அரசுக்கு ஒன்றும் பெரிய இழப்பு வந்துவிடாது” என கூறிய நீதிபதிகள், “2 நாட்களுக்குள் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்; தவறினால் கடையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்படும்” என எச்சரித்தனர்.