கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அரசு பள்ளிகள் வாங்கிக்கொள்ள ஐகோர்ட் அனுமதி
கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அரசு பள்ளி வாங்கி கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானத்திற்கு அப்பகுதியில் சொந்தமாக 24 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பள்ளிக்கூடம் நடத்துவதற்காக சென்னை மாநகராட்சி வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. ஆனால் ஒப்பந்தபடி கடந்த 1969ம் ஆண்டு முதல் இது வரை வாடகை தரவில்லை என்று கூறி பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2500 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதால் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விலைக்கு வாங்க சென்னை மாநகராட்சியை அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடந்தது. அப்போது கோவில் நிர்வாகம், மற்றும் சென்னை மாநகராட்சி இருதரப்பும் ஒப்புதல் அளித்த நிலையில், கோவில் நிலத்தை தற்போதைய சந்தை மதிப்பின் படி 18 கோடியே 85 லட்ச ரூபாய்க்கு வாங்கி கொள்ள சென்னை மாநகராட்சிக்கு, நீதிபதி அனுமதியளித்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 4ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.