×

ஐகோர்ட் அதிரடி..! முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது..!

 

திருச்சி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி 2007-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் ராதாகிருஷ்ணன். இவரது முதல் மனைவி வசந்தா. இவர் உயிரோடு இருக்கும்போதே, ரேவதி என்பவரை 1992-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் 2-வது திருமணம் செய்துகொண்டார். 2009-ம் ஆண்டு இரு மனைவிகளின் பெயர்களையும் குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என அவர் கொடுத்த கோரிக்கை மனுவை அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, 'மனுதாரரின் முதல் மனைவி 2020-ம் ஆண்டு இறந்துவிட்டதால் 2-வது மனைவியை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி, 2-வது மனைவியின் பெயரை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு அக்கவுண்டன்ட் ஜெனரல் மேல்முறையீடு செய்தார். 

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-  ஓய்வூதியம் என்பது ஒரு நலத்திட்டம் என்பதால், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி என்பது மிகவும் முக்கியமானது. முதல் மனைவி இருக்கும்போது, 2-வது திருமணம் செய்வது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 

முதல் மனைவி இருக்கும்போது 2-வது திருமணம் செய்வதை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் விதி தடை செய்கிறது. இது குற்றம் என்பதால், இந்த செயல்களை செய்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் 2-வது திருமணம் சட்டவிரோதம் என்பதால், முதல் மனைவி இறந்த நிலையில் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் கொடுக்கவேண்டும் என்பதை ஏற்க முடியாது. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.