×

உரிமைத் தொகையை இப்படி சேமிங்க..! – உங்கள் மகளின் எதிர்காலத்திற்குப் பெரிய நிதியைத் தரும் சீக்ரெட்!

 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கிடைக்கும் பணத்தை எந்தெந்த வழிகளில் சேமிக்கலாம், முதலீடு செய்யலாம்? என்பதை இங்கே பார்க்கலாம்.   

செல்வமகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Yojana) - பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மிகச்சிறந்த முதலீட்டுத் திட்டம் இதுவாகும். 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில், பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள் அஞ்சலகம் அல்லது பொதுத்துறை வங்கிகளில் இக்கணக்கைத் தொடங்கலாம். இத்திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது, இது மற்ற சேமிப்புத் திட்டங்களை விட அதிகமாகும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். மாதம் 1,000 ரூபாய் சேமிக்கும் பட்சத்தில், குழந்தையின் 21-வது வயதில் வட்டியுடன் ஒரு பெரிய தொகை கிடைக்கும். குழந்தையின் 18 வயது நிறைவடைந்தவுடன் உயர்கல்விக்காகப் பாதித் தொகையை எடுத்துக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.  

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) - பெண்களுக்கென்றே பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டு காலக் குறுகிய காலச் சேமிப்புத் திட்டம் இது. இத்திட்டத்தில் பெண்கள் தங்கள் பெயரிலோ அல்லது மைனர் பெண் குழந்தையின் பெயரிலோ கணக்கைத் தொடங்கலாம். இதற்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது, மேலும் வட்டித் தொகையானது காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு அசலுடன் சேர்க்கப்படும். குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்யலாம். குறுகிய காலத்தில் பாதுகாப்பான லாபத்தை எதிர்பார்க்கும் பெண்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த தேர்வாகும். கணக்கைத் தொடங்கி ஒரு வருடம் முடிந்த பிறகு, அவசரத் தேவைக்காக 40% தொகையை எடுத்துக்கொள்ளும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.  

அஞ்சலகத் தொடர் வைப்பு நிதி (Post Office RD) - மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க விரும்பும் பெண்களுக்கு அஞ்சலகத் தொடர் வைப்பு நிதி (RD) மிகவும் ஏற்றது. இதில் மாதம் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் உங்கள் வசதிக்கேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். தற்போது இதற்கு ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது.   ஐந்து ஆண்டுகள் கால அளவு கொண்ட இத்திட்டத்தில், இடையில் பணத்தேவை ஏற்பட்டால் ஒரு வருடம் கழித்துச் சேமிப்புத் தொகையில் 50% வரை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். எவ்வித சந்தை அபாயமும் இல்லாத பாதுகாப்பான சேமிப்பு என்பதால், இல்லத்தரசிகள் தங்களின் சிறு சேமிப்பை இதில் முதலீடு செய்வது சிறந்த பலனைத் தரும்.