×

"வீட்டில் கொரோனா சிகிச்சையா?; கவலை வேண்டாம்... 24 மணி நேரம் உங்களுக்காகவே” - தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

 

இந்தியாவில் மூன்றாம் அலை ஆரம்பமாகியதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன. மகாராஷ்டிராவில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அங்கு 20 எம்எல்ஏக்கள் 10 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு 10 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு இன்று 27 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது நினைத்துப் பார்க்க முடியாத அதிகரிப்பாகவே பார்க்கப்படுகிறது. புதிய வகை ஒமைக்ரான் பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இங்கே 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஒரு வாரத்திற்கு முன்பு 200க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 600ஐ தாண்டி செல்கிறது. இதனால் சென்னையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மாநில அரசுக்கு மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியது. தொடர்ந்து தமிழ்நாடு முழுமைக்கும் பழைய கட்டூப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளது மாநில அரசு. 1 முதல் 8 வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் அடுத்த ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளன. தியேட்டர்கள், பொது இடங்கள், பேருந்துகள் போன்றவற்றில் 50% மட்டுமே அனுமதி என கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டுள்ளன. 

இச்சூழலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு தகவல்களை வழங்கினார். அவர், "ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 4 நாட்களிலேயே நெகட்டிவ் என வந்துவிடுகிறது. தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இணைந்து 3வது அலையாக பரவுகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டபின் தொற்று  இல்லாதவர்கள் மற்றும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாம்" என்றார். அதாவது மைல்ட்டான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டு தனிமையில் இருக்கலாம்.

அவ்வாறு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவ ஆலோசனையை வீட்டிலிருந்தே பெறும் வகையில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண்களில் 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது, 044 - 25384520, 044 - 46122300 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.