இன்று கொட்டித் தீர்க்கப் போகும் மழை...4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!!
தொடர் கனமழை பெய்து வருவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அறிவித்துள்ளார். அதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதன்கிழமை (அக்.21) தமிழ்நாடு கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று (அக்.22) காலை 08.30 மணியளவிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாடு பகுதிகள் மற்றும் கேரளம் பகுதிகளில் நிலவி வருகிறது.
இதன் காரணமாக நேற்று (அக்.22) கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்தது.
இன்றும் (அக்.23) கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழ்நாட்டில் அநேக இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று (அக்.23) சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.