சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை..!! 27 விமானங்களின் சேவைகள் பாதிப்பு..
சென்னையில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக 27 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சென்னையில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ மழையும், விம்கோ நகரில் 23 செ.மீ மழையும், கொரட்டூரில் 18 செ.மீ மற்றும் கத்திவாக்கத்தில் 13 செ.மீ மழையும் பதிவானது. சென்னையில் முதன்முறையாக இந்த ஆண்டில் மேக வெடிப்பு ஏற்பட்டதாகவும், சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சென்னையில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலான நேரத்தில் தீவிரமான மேகவெடிப்பு போன்ற மழை பெய்ததாகவும், இந்த ஆண்டின் முதல் தீவிரமான வானிலை நிகழ்வு இது என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில், சென்னையில் நள்ளிரவு பெய்த மழை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாததால் 4 விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன. 8 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தாமதமாக தடையிறங்கின. மேலும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்களும் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.