×

மும்பையில் இடைவிடாது பெய்த கனமழை: காட்கோபரில் நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!

 

மஹாராஷ்டிராவின் மும்பையில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

நேற்று அதிகாலை 3:48 மணிக்கு காட்கோபரின் சிராக் நகரில் உள்ள கவுஷியா சால் குடியிருப்பு பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது மலையில் இருந்து மண் சரிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்தன. தகவல் அறிந்து வந்த மும்பை தீயணைப்பு வீரர்கள், போலீசார், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு செல்லும் பாதை குறுகலானதாக இருந்ததால் ஆம்புலன்ஸ் அருகே செல்ல முடியவில்லை. இதனால் ஒரு சில மீட்புப்படையினர் மட்டும் சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். எனினும் 2 வயது முதல் 14 வயது வரையிலான மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்; மேலும் ஏழு பேர் காயம் அடைந்தனர். நிலச்சரிவு பற்றி அறிந்த மும்பை மாநகராட்சி மேயரான பா.ஜ.,வை சேர்ந்த ரிது தாவ்டே, ''உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும்,'' என, அறிவித்தார்.