×

"சென்னையில் குளுகுளு... டெல்டாவில் இடி மின்னல்" -  மழை ரிப்போர்ட் இதோ!

 

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் ஜனவரி 6, 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இலங்கையையொட்டி உருவாகவுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 9ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 

டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 10ஆம் தேதியன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.