வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு- இயல்பு வாழ்க்கை முடக்கம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழை காரணமாக வீடுகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், பொது மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெங்களூரில் தாழ்வான இடங்களில் உள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக ராஜாஜி நகர், சாந்தி நகர், சில்க் போர்டு, ஹொறமாவு, hpr லே-அவுட், கெங்கேரி, மாரத்தஹள்ளி கொட்டிகேபாளையா, கே.ஆர்.புரா, சாய் லே-அவுட் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் இரண்டாவது அதிகபட்ச மழை பொழிவாக 105.5 மில்லி மீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார்கள், வீட்டு உபயோக பொருட்கள் மழையில் மூழ்கி சேதமாகியுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் புறநகர் பகுதி ஆன கே.ஆர். புரா, சாய் லேயவுட் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது அந்தப் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி மூலமாகவும், படகுகள் மூலமாகவும் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் சார்பில் வீடுகளுக்குள் சூழ்ந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வீட்டுக்குள் சிக்கித் தவிப்பவர்களை ஜேசிபி வாகனம் மூலம் வெளியே கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை நீர் தேங்கியுள்ளதால் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்த நிலையில் மே 26 ஆம் தேதி வரை பெங்களூரில் கனமழை பொழியும் எனவும் கர்நாடகாவில் ஆறு மாவட்டங்களில் கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தட்சிண கனடா உத்தர கனடா உடுப்பி பெல்காம் சிக்கன் 6 மற்றும் சிவ முக மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் பாகல்கோட் தார்வாட் ஹாவேரி, ஹாசன், குடகு ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.