×

முதல் நாளே இப்படியா? தவெக அலுவலகத்தில் விருப்பமனு வாங்க கட்டுக்கடங்காத கூட்டம்

 

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்குள் ஒரே நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

தவெக சார்பில் 234 தொகுதிகளுக்குமான விருப்பமனு விண்ணப்பங்களின் விநியோகம் இன்று பனையூரில் தொடங்கியது. முதல் மனு கட்சித் தலைவர் விஜய்யின் பெயரிலும் இரண்டாவது மனு பொதுச்செயலாளர் ஆனந்தின் பெயரிலும் பெறப்பட்டது. விருப்பமனுவை ரூ.100 செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம். மேலும் அதனை பூர்த்தி செய்து சமர்பிக்கையில் பொது தொகுதிக்கு 10000 ரூபாயும் தனித் தொகுதிக்கு 5000 ரூபாயும் டிடியாக எடுத்துக் கொடுக்க வேண்டும் என தவெக தலைமை அறிவித்துள்ளது. 


தவெக சார்பில் இன்று விருப்பமனு விநியோகம் தொடங்கிய நிலையில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்குள் கூடினர். ஒரே நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பாதுகாவலர்கள் திணறினர். மேலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான தவெகவின் விருப்ப மனு, விநியோகம் தொடங்கிய சில மணி நேரங்களில் காலியானது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை தவெகவினர் ஆர்வமுடன் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.