அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு; காங்கிரஸ் கட்சி வாக்குறுதி..!
'இந்திரா கேரண்டி' என்ற பெயரில் 6 முக்கிய வாக்குறுதிகள் உள்ளடங்கிய காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கொச்சியில் வைத்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டார். அதில் முதியோருக்கான ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்தப்படும். பெண்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். ரப்பர் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ரப்பர் கிலோவிற்கு 300 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்படும்.
அனைத்து குடும்பங்களுக்கும் 25 லட்சம் ரூபாய் வரை பாதுகாப்பு அளிக்கும் 'உம்மன் சாண்டி ஆரோக்கிய இன்சூரன்ஸ்' என்ற பெயரில் 25 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படும். இளைஞர்கள் தொழில் தொடங்க 5 லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லாத கடன் வழங்கப்படும் என்ற 6 கேரண்டிகள் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளன.
இதுதவிர முதியோர்களின் நலனுக்காகத் தனி அமைச்சகம் அல்லது தனித் துறை உருவாக்கப்படும். தகுதியுள்ள மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கல்வி பயில 'கே.ஆர். நாராயணன் ஸ்காலர்ஷிப்' மற்றும் கடன் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வயநாட்டில் பழங்குடியின பல்கலைக்கழகம் அமைக்கப்படும். பாண்டிச்சேரி ஜிப்மர் மாடலில் கட்டணம் இல்லா மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும். கேரளம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சுற்றுலாத் தலமாக மாற்றப்படும்" என்பது போன்ற வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளன.