புத்தகங்களை எடைக்கு போட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
திருச்சி மாவட்டம், தும்பலம் அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவசப் பாடப்புத்தகங்களை எடைக்குப் போட்ட தலைமை ஆசிரியை மஞ்சுளா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி தும்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களின் முதல் பருவ புத்தகங்களை எடைக்கு போட்டு பணம் வசூலித்த தலைமை ஆசிரியை மஞ்சுளா அதிரடி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முதலாம் பருவத் தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களிடம் வழங்கப்பட்ட இலவசப் பாடப்புத்தகங்களை திரும்பப் பெற்று, பழைய பேப்பர் வியாபாரிக்கு எடைக்கு விற்றுள்ளார். தற்போது 2ஆம் பருவம் தொடங்கியதால் மாணவர்களை முதல் பருவப் பாட நூல்களை பள்ளியில் ஒப்படைக்க வைத்த தலைமை ஆசிரியை. மாணவர்கள் ஒப்படைத்த முதல் பருவ புத்தகங்களை, பழைய பேப்பர் வியாபாரியை பள்ளிக்கே வரவழைத்து எடைக்கு போட்டதாகப் புகார் எழுந்தது.
பள்ளியில் புத்தகங்கள் வைப்பதால் டெங்கு கொசுக்கள் பரவாமல் இருக்க அவற்றை விற்றதாக மஞ்சுளா விளக்கம் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான வைரல் வீடியோ வெளியானதை அடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியை மஞ்சுளாவை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்