அப்பா கிட்ட சொல்வேன்னு சொன்னான்! – மகனை கழுத்தை நெரித்து கொன்று வயிற்று வலி என நாடகமாடிய தாய்!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே, தாயின் கள்ளக்காதலை நேரில் பார்த்த 14 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்ற மகனைக் கொலை செய்துவிட்டு உடல நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய தாயையும் அவரது கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கான்பூர் மகாராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு 14 வயதில் மகன் ஒருவன் இருந்துள்ளான். அந்தப் பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி இரவு, வீட்டின் அறையில் அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்ததை அவரது 14 வயது மகன் எதிர்பாராதவிதமாக நேரில் பார்த்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன், இதுகுறித்துத் தனது தந்தையிடம் உடனடியாகத் தெரிவிக்கப்போவதாகக் கூறியுள்ளான்.
தங்களின் விவகாரம் வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில், பெற்ற தாய் சிறுவனின் கைகளைப் பிடித்துக்கொள்ள, கள்ளக்காதலன் அவனது கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். பின்னர், சிறுவனுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் கூறி குடும்பத்தினரையும் உறவினர்களையும் நம்ப வைக்க நாடகமாடியுள்ளனர்.
எனினும், சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வு (Post-mortem) செய்தபோது, அவனது கழுத்தில் காயங்கள் இருப்பது உறுதியானது. இதத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து சிறுவனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.