ஜிஎஸ்டி குறைப்புக்கு பின்னும் விலை குறையவில்லையா?– இந்த வாட்ஸ் அப் நம்பர்ல புகார் செய்யுங்க..!
செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு, நாட்டின் மறைமுக வரி அமைப்பை இரண்டு அடுக்குகளாக (5% மற்றும் 18%) மாற்றுவதாக அறிவித்தது. இதன்மூலம், பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள் இந்த இரண்டு வரி அடுக்குகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில், யாரேனும் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனம் அல்லது ஏதேனும் ஒரு கடையில் ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு பிறகும் பொருட்களின் விலையை குறைக்காமல் அப்படியே பழைய விலைக்கே விற்பனை செய்கிறார்கள் என்றால் மக்கள் உடனடியாக 1915 என்ற தேசிய கன்ஸ்யூமர் ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 8800001915 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது . அதேபோல ஒருங்கிணைந்த புகார் தளமான INGRAM தளம் மூலம் நுகர்வோர் தங்களுடைய புகாரை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு தொடர்ச்சியாக அனைத்து பொருட்களின் விலை நிலவரங்களையும் கண்காணித்து வருவதாக தெரிவித்து இருக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் பொதுமக்கள் யாரேனும் ஏமாற்றுவதாக தெரிந்தால் உடனடியாக புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு பிறகு பொருட்களின் விலையை குறைப்பதாக அறிவித்து விட்டன. இருந்தாலும் சில விற்பனையாளர்கள் அல்லது டீலர்கள் விலை குறைப்பை நடைமுறைக்கு கொண்டு வராமல் இருக்கிறார்கள் எனும்போது இந்த எண்களை பயன்படுத்தி புகார் அளித்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்திருக்கிறது.