×

டிகிரி முடித்து 5 வருடம் ஆகிவிட்டதா? - தமிழக அரசின் உதவித்தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள்..!

 

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிடும் வகையில், மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மேலும், வேலை கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்குகிறது. இந்த பயிற்சி மூலம் இளைஞர்கள் எளிதாக வேலையும் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.   

இந்த திட்டத்தில் 9ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.200, 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, 12ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.400, டிப்ளமோ முடித்தவர்ளுககு ரூ.400, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.600 மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1,000 வரை வழங்கப்படுகிறது.   

இந்த நிலையில், இந்த திட்டத்தில் தகுதியுள்ள சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி/12ஆம் வகுப்பு தேர்ச்சி/11ஆம் வகுப்பு தேர்ச்சி/பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு  படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித் தொகை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

விண்ணப்பதாரர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர்/பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தனியார் நிறுவனங்களில் பணிபுரியதவராகவும், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமலும் இருக்க வேண்டும். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த தகுதியுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.   

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சென்னை-32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மேலும், மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் சென்னை-32. கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.  ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண், வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க என தெரிவிக்கப்பட்டுள்ளது.