×

தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியத்தொகை நிறுத்தப்பட்டதா?

 

தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியத்தொகை நிறுத்தப்பட்டதாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதற்கு தவெக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியத்தொகை நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தியை எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ள தவெகவின் உண்மை சரிபார்ப்பகம், “தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியத்தொகை நிறுத்தப்பட்டதாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றனர். ஆனால், உண்மையில் என்ன பிரச்சனை என்று செய்தி வெளியிடாமல் இருக்கின்றனர். அதாவது, சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான ஓய்வூதியத்தொகை 33.85 லட்சம் பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த செப்டம்பர் மாதம் முதல்  மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, SNA - SPARSH மூலமான ஆதார் சார்ந்த கட்டண முறையின் கீழ் ஓய்வூதியத்தொகை பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டது. இதில் சில பயனாளியின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படாதிருந்தது, ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இல்லாதது, பயனாளி வழங்கிய வங்கி அல்லது ஆதார் விவரங்கள் தவறாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருந்தது போன்ற காரணங்களால் சில பயனாளிகளுக்கு மட்டும் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ஆதார், பிரச்சனையை சரிசெய்ய தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பயனாளிகளின் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாணப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள பயனாளிகளுக்கும் விரைவில் உதவித்தொகை வந்து சேரும். இந்த தகவலையும் கூடுதலாக சேர்த்து செய்தி வெளியிட்டால் நன்றாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளது.