☰
×

காவல்துறையை அவுட்சோர்ஸ் செய்துவிட்டாரா முதல்வர் விஜய்? - கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்!

 

முதல்வர் விஜயை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக சாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது: அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழகம், தள்ளாடும் காவல்துறை. சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

அப்போதே, 'ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப் படுகிறார்களா இல்லையா?' என நான் கேள்வி எழுப்பியிருந்தேன். அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது. கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க போலீசாரின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது. பெருந்துறை அருகே நர்ஸ் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள். நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து தவெக நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது. வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற தவெக நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார். முதல்வரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா? மாநில போலீசார் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா?

போதைப்பொருட்களை கட்டுப்படுத்த, முதலில் தன் கட்சியினரை முதல்வர் கண்ட்ரோலில் வைக்க வேண்டும். அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதல்வர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா? காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், மத்திய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன. போதை பழக்கத்தை விடு, விளையாட்டை எடு என்று சொன்ன முதல்வர் முதலில் ஓய்வை விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.