குஷியில் தவெக-வினர்..! இன்று பெரம்பூரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க விஜய் திட்டம்..!
விஜய்-யின் தமிழக வெற்றி கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
மேலும், இந்த தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்து வருகிறார். அந்தவகையில் இன்று (ஏப்ரல் 18) தினம் அவர் சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க திட்டமிடப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் 30ஆம் தேதி, பெரம்பூர் தொகுதியில் விஜய் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த கையோடு பெரம்பூர் பகுதிகளில் தன் முதல் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் நடத்தி வரும் விஜய் சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை ஹைரோடு, நேரு நகர், எருக்கஞ்சேரி பிரதான சாலை, அண்ணா சாலை, டி.எச் சாலை, ஆகிய பகுதிகளில் அவர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளார் விஜய். இதற்கான நேர அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் தவெக தரப்பில் கோரப்பட்டுள்ளது. காலை 10 முதல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் 6 மணி வரையில் நேர அனுமதி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நேர அனுமதியை பொறுத்து விஜய் பிரச்சாரம் செய்யும் நேரம் இறுதி செய்யப்படும்.