கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு நிறுத்தம்
நெல்லை ஜங்ஷன் சாந்தி ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் அல்வா தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரான்- இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக தமிழக முழுவதும் வர்த்தகத்திற்கு பயன்படுத்தக்கூடிய கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு பெரிய அளவில் இருந்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்திலும் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நெல்லைக்கு அடையாளமாக இருக்கக்கூடிய திருநெல்வேலி அல்வா தயாரிப்பும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதை பிரத்தியேகமாக தயாரிக்க கூடிய ஒரு சில நிறுவனங்கள் நெல்லையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை ஜங்ஷன் பகுதியில் செயல்படும் சாந்தி ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால் இன்று முதல் அல்வா தயாரிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்து வந்த நிலையிலும் ஒரு சிலிண்டர்கள் கிடைத்ததால் அதை வைத்து அல்வா தயாரித்துக்கொண்டிருக்கின்றனர். இருந்தபோதிலும் ஜாங்கிரி லட்டு மற்றும் இதர இனிப்பு வகைகள் நிறுத்தப்பட்டிருக்கிறது அல்வா மட்டும் தயாரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இன்று முதல் கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காததால் அல்வா தயாரிப்பும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.