×

குளறுபடியால் ரத்தான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு

 

தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடியால் ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ மெயின் தேர்வுகள் மார்ச் 15 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு தொகுதி 2 நிலை அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக கடந்த பிப்.9-ஆம்  தேதி நடைபெறவிருந்த போட்டித்தேர்வுகள் குளறுபடிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி  அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவித்தது. மேலும் டிஎன்பிஎஸ்சி குளறுபடி விவகாரத்தில் இரண்டு உதவிப்பிரிவு அலுவலர் மற்றும் நிரலர்கள், இரண்டு பிரிவு அலுவலர்கள் மற்றும் ஒரு சார் செயலாளர் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குளறுபடியால் ரத்தான சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகள், உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 ஏ பணிகளுக்கு 828 பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதன்மைப் போட்டித்தேர்வுகள் மார்ச் 15 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதற்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.