ரூ.3.70 லட்சத்திற்கு ஏலம் போன தலைமுடி... யாருடையது தெரியுமா..?
அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் (George Washington) தலைமுடி கற்றை ஒன்று, சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் 4,000 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.36 லட்சம் / £3,058) விற்பனையாகியுள்ளது.
இந்தத் தலைமுடியை ஏலத்தில் விற்ற 'ரிச்மண்ட் ஏல நிறுவனம்' (Richmond Auctions) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜார்ஜ் வாஷிங்டன் 1799-ஆம் ஆண்டு உயிரிழப்பதற்குச் சற்று முன்பு, அவருக்கு விருந்தளித்து உபசரித்த ஜான் கேட்ஸ்பி (John Gadsby) என்பவரிடம் இந்தத் தலைமுடி இருந்துள்ளது. பின்னர், கேட்ஸ்பியின் வாரிசுகளிடமிருந்து ஜான் கே. லாட்டிமர் என்ற சேகரிப்பாளர் இதனைப் பெற்றுள்ளார். தற்போது இதனை ஏலத்தில் வாங்கிய புதிய உரிமையாளரின் பெயர் வெளியிடப்படவில்லை.
1799-ஆம் ஆண்டில் விர்ஜினியாவின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் வசித்து வந்த ஜான் கேட்ஸ்பி, 1798 மற்றும் 1799 ஆகிய ஆண்டுகளில் வாஷிங்டனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தனது இல்லத்தில் நடத்தியுள்ளார். வாஷிங்டனின் இறுதி நாட்களில் அவருடன் இருந்த நட்பின் அடையாளமாகத் தனது தாத்தாவிற்கு இந்தத் தலைமுடி கிடைத்ததாகவும், அதனைப் பிரேம் செய்து வாஷிங்டன் நகரிலுள்ள தங்களது வீட்டில் ஜார்ஜ் வாஷிங்டனின் உருவப்படத்திற்குக் கீழே மாட்டி வைத்திருந்ததாகவும் கேட்ஸ்பியின் பேத்தி ஜூலியா டென் ஐக் மெக்பிளேர் 1928-ஆம் ஆண்டு அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
19-ஆம் நூற்றாண்டில் அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களின் தலைமுடியை நினைவுச் சின்னமாகப் பாதுகாத்து வைக்கும் வழக்கம் உயர்குடி மக்களிடையே பிரபலமாக இருந்தது. அந்த வகையில், வாஷிங்டன் வசித்த மவுண்ட் வெர்னான் (Mount Vernon) அருங்காட்சியகத்தில் மட்டும் அவரது 50-க்கும் மேற்பட்ட தலைமுடி மாதிரிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், வாஷிங்டனின் மரணத்திற்குப் பிறகு சேகரிக்கப்பட்டதாகக் கருதப்படும் 3 தலைமுடிகள் அடங்கிய லாக்கெட் ஒன்று சுமார் 40,000 டாலர்களுக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 1776-ஆம் ஆண்டு வாஷிங்டன் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று கடந்த ஜூலை மாதம் 1,09,800 டாலர்களுக்கு விற்பனையானது.