குஜராத் பால விபத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு..!
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே இருந்த கம்பீரா - முஜிப்புர் பாலம் கடந்த ஜூலை 9ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்து நடந்த இடத்தில் 4வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், பாலம் இடிந்து விழுந்து ஆற்றில் மூழ்கி காணாமல் போன ஒருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனுடன், ஆற்றில் மூழ்கிய வாகனங்களை ஆற்றில் இருந்து அகற்றும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா பேசுகையில், ‘இன்று (நேற்று) நடைபெறும் மீட்புப் பணியில் இடிந்து விழுந்த பாலத்தின் பிரதான பகுதியை அகற்றி, காணாமல் போனவரின் உடலை மீட்க ஒரு தொழில்நுட்பக் குழு நடவடிக்கை எடுக்கும். சல்பூரிக் அமிலத்தை ஏற்றிச் சென்று நீரில் மூழ்கிய டேங்கரை பாதுகாப்பாக மீட்க குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அந்தப் பணியில் ஈடுபடும். மேலும், அந்த டேங்கரில் கசிவு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று அவர் கூறினார்.