குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி 10 வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு
குடியாத்தம் அருகே செட்டிகுப்பம் பகுதியில் ஏரியில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த சுமங்கலி - செந்தில் என்பவரது மகன் சுரேந்தர் (15) அவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே இன்று பத்தாம் வகுப்பு கணித தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த சுரேந்தர், தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகே இருந்த ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்பொழுது ஏரியில் சிக்கிய சிறுவன் சுரேந்தரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து உடல் கூறு ஆய்வுக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணக்கு தேர்வு எழுதி வந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.