×

நாளை குருப் 2 முதல் நிலை தேர்வு! ஒரு பணியிடத்திற்கு 858 பேர் போட்டி!

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2-க்கு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை பெற்றது.

தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 5 லட்சத்து 53 ஆயிரத்து 635 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் ஒருவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ளவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் ஆவர். இவர்களுக்கு 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வினை கண்காணிக்கும் பணியில் 1905 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 188 மையங்களில் 53 ஆயிரத்து 606 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு மையங்களுக்கு செல்ஃபோன், கைக்கடிகாரம் (Smart Watches), ப்ளுடூத் அல்லது தகவல் தொடர்பு சாதனங்கள் அல்லது தகவல் தொடர்பு சாதனமாக பயன்படுத்தத்தக்க துணைக் கருவிகளை கொண்டு செல்ல அனுமதியில்லை.

விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளன்று அதாவது 28.09.2025 முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 9 மணிக்கு முன்னரே செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்'.