3 வயது பேத்தியுடன் தப்பிக்க முயன்ற மூதாட்டி! இருவரையும் மிதித்து கொன்ற யானை
வால்பாறையை அடுத்து உள்ள வாட்டர்பால்ஸ் எஸ்டேட், உமாண்டி முடக்கு பிரிவில், தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை யானை தூக்கத்தில் இருந்த பாட்டி மற்றும் பேத்தியை மிதித்து கொன்ற சம்பவம் வால்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வால்பாறை வாட்டர் பால்ஸ் எஸ்டேட் தோட்டத் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் மாரியப்பன் அவரது மனைவி சுகன்யா தம்பதி ஆகியோருக்கு மகன் மற்றும் மகள் ஹேமாஸ்ரீ( 3) உள்ளனர். மாரியப்பன் அம்மா அசலை(55) உடன் வசிக்கிறார். இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை (டென்சிங்-யானை பெயர்) வீட்டின் அருகே வந்து, ஜன்னலை உடைக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. யானை வந்ததை கண்ட அசாலா, தன் பேத்தி ஹேமாஶ்ரீயை கையில் தூக்கிக்கொண்டு வெளியே வந்து தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளியே நின்ற யானை இருவரையும் தாக்கி உள்ளது.
குழந்தை ஹேமாஶ்ரீ(3) சம்பவ இடத்தில் உயிரிழந்து உள்ளார். அசலை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர் அசலை இறந்து விட்டதை உறுதி செய்தனர். சம்பவம் அறிந்த வால்பாறை வனச்சரகர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு யானையை விரட்டி வனத்தில் விட்டு, பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். பின்னர் வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் சென்ற போலீசார் உடல்களை மீட்டு வால்பாறை அரசு மருத்து உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
சம்பவம் அறிந்த உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் வனத்துறையினர் முதற்கட்ட உதவித்தொகை ரூ.50 என 2 பேருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. உடற்கூறாய்வு முடிந்து உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் உடலை பெற்று வாட்டர்பால்ஸ் எஸ்டேட்டுக்கு இலவச அமரர் ஊர்தியில் எடுத்து சென்றனர். வனத்துறையினர், போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு அரசு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளனர். இந்த நிலையில் வால்பாறை பகுதியில் யானைகள் சீசன் தொடங்கி உள்ள நிலையில், 6க்கும் மேற்பட்ட இடங்களில் 70க்கும் மேற்பட்ட யானைகள் வனத்தை விட்டு வெளியேறி உள்ளது. இன்று காலை சோலையார் எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் பணியின் போது யானைகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினர் யானைகளை விரட்டி அருகில் உள்ள வனத்திற்குள் விட முயன்றனர். தொடர்ந்த யானைகள் தேயிலை தோட்ட பகுதியில் வலம் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், யானைகள் வந்தால் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். வெளியே வருவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.