அடுத்த சர்ச்சையில் சிக்கிய ஜி.பி.முத்து- போலீசார் வழக்குப்பதிவு
திருச்செந்தூர் அருகே உடன்குடியில் பெண்ணை தாக்கியதாக நடிகர் ஜிபிமுத்து மற்றும் அவரது மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி அடுத்த பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் நடிகர் ஜிபி முத்து. சின்னத்திரை பிக்பாஸ் மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் வசிக்கும் அதே பகுதியில் முத்துமகேஷ் அவரது மனைவி பாலஅமுதா என்பவரும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆம் தேதி மாலையில் நடிகர் ஜிபி முத்துவின் இரண்டு மகன்கள் அதே தெருவில் வலதுபக்கமும், இடதுபக்கமுமாக சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வீட்டிற்கு வந்த பாலஅமுதாவின் கணவர் முத்து மகேஷ், ரோட்டில் இப்படி ஏன் வருகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதன்பிறகு அந்த இரண்டு சிறுவர்களும் முத்து மகேஷை முறைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் முத்து மகேஷ் வீட்டிற்கு வந்த ஜிபி முத்து, முத்துமகேஷை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது, “எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம்” என்று கூறி முத்து மகேஷின் மனைவி வெளியே வந்துள்ளார். அதே சமயத்தில் ஜிபி முத்துவின் மனைவி அஜிதா, ஜிபி முத்துவின் உறவினர்கள் அனிதா மற்றும் கணேசன் ஆகியோர் அங்கு வந்து வீட்டில் இருந்து வெளியே வந்த முத்து மகேஷின் மனைவி பாலஅமுதாவை கீழே தள்ளி விட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பால அமுதாவுக்கு வலதுபக்க கடவாய் பல் உடைந்துள்ளது. மேலும் பின்பக்க தலையிலும், வலது முழங்கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பாலஅமுதாவை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் நடிகர் ஜி.பி.முத்து, அவரது மனைவி அஜிதா, உறவினர்கள் அனிதா மற்றும் கணேசன் ஆகிய நான்கு பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.