மாதம் ரூ.3,000 பென்ஷன் தரும் மத்திய அரசின் திட்டம்! நாகை மாவட்ட தொழிலாளர்களுக்கு ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் செய்தி!
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (Pradhan Mantri Shram Yogi Maandhan - PM-SYM) என்ற திட்டம் 18 முதல் 40 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இந்திய அரசின் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டமாகும். இத்திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை முறையாக செலுத்தி வந்தால், இந்திய அரசும் அதே அளவு இணைப் பங்களிப்பை வழங்கும். இதன் மூலம், 60 வயதை அடைந்த பின்னர் மாதந்தோறும் ரூ.3,000/- உறுதியான ஓய்வூதியம் பெறும் வசதி வழங்கப்படுகிறது.
சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள், விடுதி மற்றும் விருந்தோம்பல் துறை பணியாளர்கள் (Tourist Guides), துப்புரவுப் பணியாளர்கள் (House Keeping Staffs), கைவினைக் கலைஞர்கள், தெருவோர வியாபாரிகள், கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள், உணவக மற்றும் உணவுச் சேவை வழங்குநர்கள், மேலும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பிற சேவை வழங்குநர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடையவர்களாவர்.
தகுதியுடைய அனைத்து தொழிலாளர்களும் தங்களது ஆதார் அட்டை, சேமிப்பு வங்கி கணக்குப் புத்தகம் (Passbook) மற்றும் கைப்பேசி எண்ணுடன், அருகிலுள்ள பொது சேவை மையத்தை (Common Service Centre - CSC) அணுகி, இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சுற்றுலா சங்கங்கள், விடுதி உரிமையாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தகுதியுடைய தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும், இதன் மூலம் சுற்றுலாத் துறையில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பும், பொருளாதார நிலைத்தன்மையும் உறுதி செய்யப்படும்.
மேலும், விபரங்களுக்கு பூம்புகார் சுற்றுலா அலுவலர், அவர்கள் அல்லது பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் உள்ள சுற்றுலா அலுவலகம் அல்லது 9176995843 என்ற கைப்பேசி எண்ணை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.