×

வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பு  ரூ.50 இலட்சமாக உயர்த்தி அரசாணை!!

 

வீடு கட்டுவதற்கும் கட்டிய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பினை வாங்குவதற்கும் வீடு கட்டும் முன் பணத்தினை தமிழக அரசு அரசு பணியாளர்களுக்கு வழங்கி வருகிறது.  இந்த முன்பணம் நான்கு ஆண்டுகள் முறையான பணி மற்றும் நுழைவு பதவியை பதவியில் தகுதிகாண்  பருவம் முடித்த அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.  இதன் மூலம் மாநில அரசு பணியாளர்களுக்கு ரூ.40 லட்சம் கடனாக அவர்களின் ஊதிய தகுதிக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.  

இவ்வீடு கட்டும் முன்பணத்தில் 50 விழுக்காடு மனைவிடம் வாங்குவதற்கும்,  மீதமுள்ள 50 விழுக்காடு மனையில் வீடு கட்டவும் வழங்கப்படுகிறது.  வீடு கட்டும் முன்பணத்தின் மூலம் கட்டப்பட்ட வீட்டை  மேம்படுத்தவும்,  விரிவாக்கவும் மேற்காண்  கடன் தொகையின் தகுதியுள்ள முன்பணத்தில் 50% மொத்த வரம்பிற்குட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடு கட்டும் முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக வரும் நிதியாண்டில் இருந்து உயர்த்தப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பு  ரூ.40 இலட்சத்திலிருந்து  ரூ.50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.