×

3 லட்சம் டூ 5 லட்சம்... பத்திரிக்கையாளர்கள் குடும்ப உதவி நிதியை உயர்த்தி அரசாணை!

 

தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினர் நலன் கருதி, பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துபவர்கள்ஆகியோர் பணியிலிருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, குடும்ப உதவி நிதியாக அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப 3 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது.

இச்சூழலில் கடந்த சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், இந்த நிதி 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்து விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். 15 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்து விடுவார்களேயானால் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 

10 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்தால் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்.  5 ஆண்டுகளில் இறந்துவிட்டால் 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயும் உயர்த்தி குடும்ப உதவி நிதி வழங்கப்படும் என சொல்லப்பட்டது. தற்போது இதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையைப் பெற்று செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.