×

ஜூன் 20ல் கிண்டி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு?

 

ஜூன் 20ஆம் தேதி சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று, கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.   அதன்படி, தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் - இரைப்பை,புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் ரூ.230 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழக மக்க ளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறு  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு  விடுத்தார். திறப்பு விழாவிற்கு வருமாறு ஏப்ரல் 28ஆம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவரை நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்து இருந்தார்  முதலமைச்சர் மு க ஸ்டாலின். இந்த சூழலில் குடியரசு தலைவரின் தமிழ்நாட்டு வருகை ரத்தாகியுள்ளது. 

இந்நிலையில் சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 20ல் குடியரசுத் தலைவர் திறந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசுத் தலைவர் வெளிநாடு பயணம் மேற்கொள்வதால் ஜூன் 5ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 20ம் தேதி திறந்து வைக்கிறார் என கூறப்படுகிறது.