கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு..!
கோதுமை மாவு, மைதா, ரவை, ஆட்டா உள்ளிட்ட கோதுமை சார்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையைக் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு நீக்கியுள்ளது.
இந்தத் தடைநீக்கம் உடனடியாக நடப்பிற்கு வந்தது. உள்நாட்டுத் தேவைக்கான கையிருப்பு போதுமான அளவில் இருப்பதால், அரசாங்கம் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதன்மூலம் கோதுமை சார்ந்த அனைத்துப் பொருள்களின் ஏற்றுமதியும் தடையின்றி இயல்புநிலைக்குத் திரும்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷ்யா-உக்ரேன் மோதல் காரணமாக அனைத்துலகச் சந்தையில் கோதுமை விலை கிட்டத்தட்ட 40 விழுக்காடுவரை கூடியது.
அத்துடன், கருங்கடல் பகுதியில் நிலவிய போரால் விநியோகத் தொடரும் பாதிக்கப்பட்டது. அவ்வழியாகத்தான் உலகில் நான்கில் ஒரு பங்கு கோதுமை வணிகம் நடந்துவந்தது.
உலகளாவிய இந்த விநியோகத் தொடர் பாதிப்பை ஈடுசெய்யும் நோக்கில் இந்தியா ஏற்றுமதியை அதிகரித்தது. அதனால், இந்திய உள்நாட்டுச் சந்தையில் கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை வெகுவாக உயர்ந்தது.
அதனைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடந்த 2022 ஜூலை 12ஆம் தேதி கோதுமை சார்ந்த பொருள்களின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடைவிதித்தது.
பின்னர், இவ்வாண்டுத் தொடக்கத்தில் அந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, ஆண்டிற்கு ஐந்து மில்லியன் டன் வரை மட்டும் கோதுமை சார்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.