வாட்ஸ்அப்பின் புதிய 'யூசர்நேம்' அம்சத்திற்கு மத்திய அரசு தடை..!
வாட்ஸ்அப் (WhatsApp), அதன் பயனர்களின் தனியுரிமையை (Privacy) மேலும் பலப்படுத்தும் நோக்கில், கைப்பேசி எண்களைப் பகிராமல் தனித்துவமான பயனர் பெயர்கள் மூலம் மற்றவர்களுடன் இணைவதற்கான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. அதாவது, இதுவரை புதிய நபர்களுடன் வாட்ஸ்அப்பில் பேச வேண்டும் என்றால், அதற்கான கைப்பேசி எண்ணைக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், இனி அதற்குப் பதிலாக பயனர் பெயரை மட்டும் பகிர்ந்தால் போதுமானது. இதன்மூலம், பயனர் பெயரைப் பயன்படுத்தி யாராவது செய்தி அனுப்பும்போது, அவர்களுக்கு பயனரின் கைப்பேசி எண் காட்டப்படாது.
மேலும், இந்த அம்சத்திற்கான பயனர் பெயர்களை முன்பதிவு செய்யும் (Reserve) வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் தொடங்கியது. இதற்காக, பயனரின் பெயர் 3 முதல் 35 எழுத்துகள் வரை இருக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இதன் கூடுதல் பாதுகாப்பிற்காக 'யூசர்நேம் கீ' என்ற புதிய அம்சத்தையும் வாட்ஸ்அப் வழங்கியது. இதை ஆன் செய்து வைத்தால், பயனர் பெயர் தெரிந்திருந்தாலும், இந்தச் சாவியையும் (Key) உள்ளிட்டால் மட்டுமே புதியவர்களால் பயனர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும்.
ஆனாலும், இந்த அம்சம் தற்போது முதற்கட்டமாகப் பயனர் பெயர்களை முன்பதிவு செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இந்தச் சேவை முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும் என்று வாட்ஸ்அப் தாய் நிறுவனமான மெட்டா (Meta) தெரிவித்திருந்தது. இந்த நிலையில், வாட்ஸ்அப்பின் முன்மொழியப்பட்ட பயனர் பெயர் அம்சத்தை, அதன் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தாக்கங்கள் குறித்த கலந்தாலோசனைகள் முடிவடையும்வரை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மெட்டா நிறுவனத்திற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
தகவல்களின்படி, இந்த அம்சம் எவ்வாறு செயல்படும், பயனர்களைச் சரிபார்க்க என்ன வழிமுறைகள் இருக்கும், மேலும் ஆள்மாறாட்டம், இணையவழி மோசடி மற்றும் பிற முறைகேடுகளைத் தடுக்க நிறுவனம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு மெட்டா நிறுவனத்திடம் அரசாங்கம் கேட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆய்வு மற்றும் ஆலோசனைகள் நிறைவடையும் வரை இந்தியாவில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த வேண்டாம் என்றும் அந்நிறுவனத்திடம் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி, மூன்று நாட்களுக்குள் விரிவான விளக்கம் கோரியுள்ளது என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனத்தின் புதிய 'யூசர்நேம்' (Username) அம்சம் ஆள்மாறாட்டம் மற்றும் இணையவழி மோசடிகளுக்கு வழிவகுக்கும் என அச்சம் தெரிவித்து, இந்திய அரசு மெட்டா நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மூன்று நாட்களுக்குள் பதிலளிக்கக் கோரி அனுப்பப்பட்ட இந்த நோட்டீஸைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ விளக்கத்தை தற்போது அளித்துள்ளது.
அரசாங்கத்தின் பாதுகாப்பு கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வாட்ஸ்அப் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"வாட்ஸ்அப் செயலியில் முன்மொழியப்பட்டுள்ள 'பயனர் பெயர்' (Username) வசதி இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. தற்போதைய சூழலில் வாட்ஸ்அப் கணக்கைத் தொடங்கிப் பயன்படுத்துவதற்குப் பயனர்களின் மொபைல் எண் இன்னமும் கட்டாயமான ஒன்றாகவே நீடிக்கிறது."
மேலும், இந்த புதிய அம்சத்தை பயன்படுத்திப் போலி கணக்குகள் உருவாக்குவது மற்றும் ஆள்மாறாட்டம் செய்வதைத் தடுக்கப் பல பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக நிறுவனம் விளக்கியுள்ளது. குறிப்பாக, பிரபலங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் பெயர்களில் மற்றவர்கள் போலி யூசர்நேம்களை முன்பதிவு செய்யாமல் இருக்க, அந்த முக்கியக் கணக்குகளின் பயனர் பெயர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு (Reserved) பாதுகாக்கப்பட்டுள்ளன.
பயனர் பெயர் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்க 'பல அடுக்கு பாதுகாப்பு' (Multi-layered security) வழிமுறைகள் மற்றும் 'யூசர்நேம் கீ' (Username Key) போன்ற கூடுதல் தனியுரிமை அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.
அரசாங்கத்துடனான ஆலோசனைகள் மற்றும் விரிவான பாதுகாப்பு ஆய்வுகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பின்னரே, நடப்பு 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த புதிய அம்சம் இந்தியாவில் படிப்படியாக (Phase-wise) அறிமுகம் செய்யப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் இந்த விரிவான விளக்கத்தைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.