×

பள்ளிகளுக்கு அருகே ஸ்டிங் எனர்ஜி பானம் விற்க அரசு தடை..!!!

 

மஹாராஷ்டிராவின் சட்டசபையில் பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகே போதைப்பொருட்கள் விற்பது தொடர்பான விவாதம் நேற்று நடந்தது. அவற்றை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது.

இது குறித்து பா.ஜ., - எம்.எல்.ஏ., விக்ரம் பச்புடே எழுப்பிய கேள்விக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் பதிலளித்தார். அவர் கூறியதாவது: சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, எனர்ஜி பானங்களில் பெரும்பாலும் அதிக அளவிலான காபின் மற்றும் சர்க்கரை உள்ளது. 'ஸ்டிங் எனர்ஜி' பானத்தில் அது கூடுதலாக உள்ளது. எனவே, பள்ளி வளாகத்திற்குள்ளும், அதை சுற்றியுள்ள 500 மீ., பகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும், 'ஸ்டிங் எனர்ஜி' மற்றும் அது போன்ற எனர்ஜி பானங்கள் விற்க தடை விதிக்கப்படுகிறது.

அவற்றை விற்பவர்கள் மீது உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு எனர்ஜி பானங்களால் ஏற்படும் ஆபத்தை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாட்டை உடனடியாக அமல்படுத்த உணவு மற்றும் மருந்து நிர்வாக துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், எனர்ஜி பானங்கள் அருந்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து மாணவர்கள் மத்தியில் பள்ளி நிர்வாகம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.