சபாநாயகர் அப்பாவு வாசித்த கவர்னர் உரை: முக்கிய அம்சங்கள் ஒரு தொகுப்பு..!
கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:*
* பழங்குடியின மக்களுக்காக ரூ.315 கோடி செலவில் 7,255 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
* சிறப்பு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.140 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது.
* அம்பேத்கர் அயலகத் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் கல்வி நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது.
* காலனி என்ற சொல் நீக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
* தமிழகம் முழுவதும் 4.9 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
* குடிசை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட கனவு இல்லம் திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
* தமிழகம் முழுவதும் ரூ.900 கோடி செலவில் அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 36 கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4,432 பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
* ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் பாதுகாப்பான குடிநீரை, தனிப்பட்ட குழாய் இணைப்புகள் மூலம் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், மாநில அரசின் நிதியிலிருந்து மட்டும் 1 கோடியே 12 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.3,112 கோடி நிதி இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் புதிய திட்டங்களுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்குவதில்லை.
* தமிழகத்தின் பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது; மகளிர் மேம்பாட்டுக்கான பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
* திராவிட மாடல் ஆட்சியில் ஆதி திராவிடர் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
* சென்னை செம்மஞ்சேரியில் ரூ.216 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
* கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது வருத்தமளிக்கிறது. மெட்ரோ ரயில் விவகாரத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கவர்னர் உரையை வாசிக்கும் போது தெரிவித்தார்.