×

"புரட்சியை ஏற்படுத்தியவர் விஜய்"- புகழ்ந்து தள்ளிய ஆளுநர்

 

தவெக கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை அமைத்துள்ளது என ஆளுநர் அர்லேகர் கூறினார்.

தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர் அர்லேகர், “முந்தைய அரசு போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த தவறி விட்டது. தவெக ஆட்சிக்கு வந்ததும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. போதைப்பொருட்களை ஒழிப்பதில் அரசு தனி கவனம். அமைதியான, பாதுகாப்பான தமிழகம் என்ற அடிப்படையில் அரசு செயல்படுகிறது. போதையில்லா தமிழகம் என்ற அடிப்படையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத நிலையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மாநிலத்தின் இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழல் சமநிலையையும் பேணி காக்கும் வகையில், ஒரு விரிவான நிலையான சுற்றுலா கொள்கை வகுக்கப்படும். உட்கட்டமைப்பை சுற்றுச்சூழல் மேம்படுத்தி பாதுகாப்போடு தமிழ்நாட்டை உலகளாவிய பாரம்பரிய மற்றும் சூழல்சார் சுற்றுலாத் தலமாக இந்த அரசு மாற்றும்.


தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கை என்பதில் உறுதியாக உள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும். புதிய கல்விக் கொள்கையை தவெக அரசு உறுதியாக எதிர்க்கும். கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் மக்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது தவெக . இரண்டே ஆண்டுகளில் மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளார் விஜய். தடைகள், பண பலத்தை தாண்டி ஜனநாயகத்தில் விஜய் வென்றுள்ளார். புரட்சியை ஏற்படுத்தியவர் விஜய்” என்றார்.