×

மருத்துவர் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது- ஆளுநர் ரவி

 

டாக்டர். பாலாஜி ஜெகநாதன் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதுடன் வன்மையாக கண்டிக்கத்தக்கது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயியல் துறையில் பணிபுரிந்து வருபவர் மருத்துவர் பாலாஜி. இன்று வழக்கம் போல் பணிக்கு வந்த அவரை சந்திப்பதற்காக வந்த ஒருவர் சரமாரியாக கத்தியால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் தளத்தில் பணி மருத்துவரின் அறையில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து, மருத்துவரின் கூச்சல் சத்தத்தை கேட்டு உதவியாளர் அறையை திறக்க முற்பட்ட போது அறை உள்புறம் தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் ரத்தக்கரை படிந்த கத்தியுடன் வெளியே வந்த நபரை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து சரமாரி அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. கடந்த 6 மாதமாக அவரது தாய் பிரேமாவிற்கு கலைஞர் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு  சிகிச்சை எடுத்துவந்ததும் தெரியவந்தது.