9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் கடந்த அக்டோபர் 14 முதல் 17 ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. அதன்படி இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மொத்தம் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையில் நிறைவேற்றப்பட்ட 16 சட்ட மசோதாக்களில் ஒன்பது மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த ஒன்பது மசோதாக்களில் சில முக்கிய சட்ட மசோதாக்கள் அடங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புரிமை மசோதா முதன்முதலாக கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இதன் பிறகு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்பந்தல் அளிக்காததால் காலம் தாழ்த்தப்பட்டது.
இது தொடா்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுக்கு, ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த ஆக.25 இல் எழுதிய கடிதத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததற்கான காரணங்களை குறிப்பிட்டு இந்த மசோதாவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து மசோதாவை மறு ஆய்வு செய்து சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புரிமை மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும் தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதா, சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்ளிட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
குறிப்பாக, தமிழ்நாடு நெடுஞ்சாலைகள், கடல் சார் வாரியம், தமிழ்நாடு மின் நுகர்வு அல்லது விற்பனை வரி திருத்த மசோதாக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்சி-க்களுக்கான ஓய்வூதிய உயர்வுக்கான தமிழ்நாடு சம்பளம் வழங்கல் திருத்த மசோதா, பல்வேறு வழக்கிழந்த சட்டங்களை நீக்குவதற்கான இரு சட்ட மசோதாக்கள் உள்ளிட்ட 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.