×

மனித உரிமை மீறல் சம்பவங்களை அரசு அனுமதிக்காது - முதல்வர் மு.க.ஸ்டாலின்..

 

திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின்  பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவத்தில்,  ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 29) தெரிவித்தார்.

நெல்லை அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வரும்  பல்வீர் சிங் ,  சிறிய குற்றங்களுக்காக காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி கொடூர தண்டனை அளித்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. 10-க்கும் மேற்பட்டோருக்கு இதேபோன்று அவர் தண்டனை அளித்துள்ளதாகவும்,  அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் செய்திகள் வெளியாகின.  

இந்த சர்ச்சை தொடர்பாக  சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலத் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறார். இதற்கிடையே  ஏஎஸ்பி பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக  தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்குப் பதில் அளித்துப் பேசிய  முதல்வர், “அம்பை ஏஎஸ்வி விவகாரத்தில் புகார் வந்த உடனேயே விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. உடனடியாக அந்த ஏஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன்.

முழுமையான விசாரணை அறிக்கை வந்த உடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவை எல்லாம் சம்பவம் நடத்த உடனே இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள். சார் ஆட்சியர் தலைமையில் நடக்கும் விசாரணையின் முழு அறிக்கை வந்ததும் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவித சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது. இந்த ஆட்சியில், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.