இனி வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடை அணிந்து வர வேண்டும் - அமைச்சர் ராஜ்மோகன்..!
தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக அரங்கில் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், பட்டிமன்றத்தில் பேசிய என்னை, இன்று அமைச்சரவையில் பேச வைத்தவர் முதல்வர் விஜய். நவம்பர் 1 தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என முதல்வரிடம் கூறியதும், அதற்கு உடனே செயல் வடிவம் கொடுத்தார். இதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்காக ரூ. 5 கோடி தருவதாக ஒருவர் கூறுவதாக லயோலா மணி என்னிடம் வந்து கூறினார். ஆனால், 500 கோடி ரூபாய் கொடுத்தாலும் காசு வாங்கி கொண்டு பதவி வழங்க மாட்டேன். அந்த பதவி உரிய நபருக்குதான் எனக் கூறிவிட்டேன்” என்றார்.
மேலும், “முதலமைச்சர் விஜய் வாரம்தோறும் வேட்டி சட்டையில் வருவதை பார்த்த நான், அவரிடம் ஆடை சிறப்பாக இருக்கிறது என கூறினேன். அதேபோல் அமைச்சர்கள், அதிகாரிகள் வந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தேன். அதை நடைமுறைப்படுத்துங்கள் என கூறியுள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக வாரத்தில் ஒரு நாள் அரசு அலுவலகத்தில் 'மரபு ஆடை தினம்' கடைபிடிக்கப்படவுள்ளது. அரசு பணியில் உள்ள அனைவரும் அந்த நாளில் வேட்டி, சட்டை மற்றும் சேலையில் வர வேண்டும்" என அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தமிழ் சங்கங்களையும் ஒன்றிணைத்து தலைமைச் செயலகத்தில் தமிழ் சங்கம் தொடங்கப்பட்டு, அதன் தலைவராக முதல்வர் செயல்படுவார். மீண்டும் உலக தமிழ் மாநாடு நடத்தப்படும். தமிழ்நாட்டில் துவக்கப்படும் மாநாடு உலகம் முழுவதும் நடத்தப்படும்.
அரசு பள்ளிகளில் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சி நடந்தப்படும். எனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்காக பாடுபடுவேன். நான் கடைசியாக மறையும்போது என் உடல் மீது திருக்குறள் புத்தகத்தை வைத்து என்னை அடக்கம் செய்யுங்கள்” என பேசினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த ராஜ்மோகனிடம், தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தனிக்கொடி உள்ளது. அதுபோன்று தமிழ்நாட்டிற்கும் தனிக்கொடி கொண்டுவர முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துறை சார்ந்த நிபுணர்களிடம் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடை அணிந்து வருவது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.