நாளை போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை- தமிழக அரசு
'ஜாக்டோ - ஜியோ' சார்பில் நாளை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ' சார்பில் தமிழகம் முழுவதும் நாளை அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், நாளை பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது தொடர்பாக அனைத்துறை செயலாளர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நோ ஓர் நோ பே என்ற அடிப்படையில், நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று, மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்கள் விவரங்களை சேகரிக்கவும், அவற்றை மனித வள மேலாண்மை துறைக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.