அரசு ஊழியர்களுக்கு கடிவாளம்- மூவ்மெண்ட் ரெஜிஸ்டரை கண்காணிக்க உத்தரவு
அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் (மூவ்மெண்ட் ரெஜிஸ்டர்) செயல்பாடு பதிவேடுகளை பராமரிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே. ராஜன் அவர்களின் தலைமையிலான நிர்வாகச் சீர்திருத்தக் குழு, பணியாளர்களின் செயல்பாடுகளைக் கண்டிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், இதற்கான 'பணியாளர் நடமாட்டப் பதிவேடு' (Movement Register) பராமரிக்கப்பட்டு அலுவலகத் தலைவரால் நாள்தோறும் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளர் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கான இத்தகைய பதிவேடு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது; இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் இப்பதிவேடு முறையாகப் பராமரிக்கப்படுவதை மீண்டும் வலியுறுத்த அரசு முடிவு செய்துள்ளது.
எனவே, தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறைகளும் மற்றும் துறைத் தலைவர்களும் பணியாளர் நடமாட்டப் பதிவேடுகளைச் சரியாகப் பராமரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அலுவலக நேரத்தில் பணியாளர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக, தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துக் கீழ்நிலை அலுவலகங்களிலும் இப்பதிவேட்டைக் கண்டிப்பாகப் பராமரிக்குமாறு துறைத் தலைவர்கள் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.