×

சேலத்தில் சரக்கு வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து- பலி 8ஆக உயர்வு

 

ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து, உத்தமசோழபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து எதிர் புற சாலையில் வந்த டெம்போ டிராவலர் மற்றும்  இருசக்கர வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு குழந்தை உட்பட  எட்டு  பேர் உயிரிழந்தனர்.


ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து  கொண்டிருந்த நிலையில், உத்தமசோழபுரம் அடுத்துள்ள சூளைமேடு என்ற பகுதியில் நிலைத்தடுமாறி கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, சேலம்- கோவை  தேசிய நெடுஞ்சாலையில் புகுந்த போது சேலம் நெய்காரப்பட்டி பகுதியில் இருந்து கல்பராபட்டி பகுதிக்கு குலதெய்வ கோவிலுக்கு  11 பேரை ஏற்றிக் கொண்டு வந்த டெம்போ டிராவலர்  வாகனத்தின் மீதும், அதன் அருகே வந்த இருசக்கர வாகனத்தின் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தி , என் சர்வீஸ் சாலையில் சென்று நின்றது. இதில் டெம்போ டிராவலர் வாகனத்தில் பயணித்த ஒரு குழந்தை உள்ளிட்ட இருவரும் ,  இரு சக்கர வாகனத்தில் சென்ற தாயும் மகனும்  என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் டெம்போ ட்ராவலர் வாகனத்தில் வந்த ஒன்பது  பேர் படுகாயம் அடைந்த நிலையில்,  அவர்களை உடனடியாக  அருகே இருந்த தனியார்  மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி உயிருக்கு போராடிய மேலும் நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர் . இதனிடையே சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து  காவல்துறையினர் , சேதமடைந்த  வாகனங்களை அப்புறப்படுத்தி ,  போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன்(21), அவரது தாய் இருசாயி (40), டெம்போ ட்ராவலர் வாகனத்தில் சென்ற செல்வராஜ், அமுதா, முருகன், 11 மாத கைக்குழந்தை ஜீவிகா, ஐந்து வயது சிறுமி நித்திஷ்கா, இரண்டு மாத கர்ப்பிணி பெண்ணான சத்தியா என எட்டு பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.  மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மணிகண்டன், இருசாயி தவிர, டெம்போவில் பயணம் செய்த ஒரே குடும்பத்தினர். இதில் ஜீவிகா என்ற 11 மாத குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக கல்பாரபட்டி பகுதியில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு செல்லும்போது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டு, உயிரிழந்துள்ளனர். இதனடையே அரசு பேருந்து ஓட்டுனர் அய்யன் துறையை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.